உரையாடியவர்: சண்முகம் சரவணன்
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறீர்கள். இந்தப் பின்புலத்தை அடிப் படையாகக் கொண்டு, உங்கள் ஆய்வுப்பணி பற்றி உரையாடலாம் என்று நினைக்கிறேன். உங்கள் ஆய்வு எப்படித் தொடங்கியது.
1985 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகச் சேருவதற்கு முன்பு எனது ஆய்வுக்கான அடிப் படைகள் உருவாயின. 1979இல் சென்னை நகருக்கு வந்தடைந்தபின் இதற்கு முன் இருந்த உலகத்திலிருந்து வேறொரு உலகத்தில் நுழைகிறோம் என்ற உணர்வுக்கு ஆட்பட்டேன். பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில் ஆய்வுப் படிப்பிற்குச் சேர்ந்தேன். விந்தன் பற்றி ஆய்வு செய்யும் திட்டத்தை பேரா.இரா.இளவரசு என்னிடம் கூறினார். எம்.ஃபில் படிப்பில் விந்தன் பற்றிய மிக விரிவான வாசிப்பு எனக்குக் கிடைத்தது. கோவிந்தன் எனப்படும் விந்தன் தமிழ்ப் படைப்பாளிகளுள் வேறு பட்ட தன்மைகளைக் கொண்டிருந்தவர். உதிரிப்பாட்டாளி மக்கள் குறித்து ஆழ்ந்த அக்கறையோடு படைப்புக்களில் பதிவு செய்தவர். அச்சுத் தொழிலாளியாக வாழத் தொடங்கி எழுத்தாளரானவர். அவருடைய தொடக்ககால எழுத்துப் பணிகளுக்கு கல்கி உற்சாகம் அளித்திருக்கிறார். கல்கி குறித்து என்னை மனிதனாக்கிய மனிதன் என்று விந்தன் எழுதியுள்ளார். ஆழ்ந்த மனிதாபிமானப் பண்புகளை வெளிப்படுத்தும் எள்ளல் மொழியில் கதைகளை எழுதியவர் விந்தன். இடதுசாரி மனநிலை உடையவர் களிடம் நெருக்கமாகப் பழகியவர். தமிழொளி, குயிலன், ஜெயகாந்தன் ஆகியோர் இவரது நண்பர்கள். 1954 இல் கார்க்கியின் படத்தை அட்டையில் போட்டு மனிதன் என்ற பத்திரிகையைக் கொண்டு வந்தார். சுமார் பத்து இதழ்கள் வந்தன. தெருவில் வாழும் பாட்டாளி மக்கள் குறித்து தனது மனிதன் இதழில் Ôஇதோ ஒரு சுயமரியாதைக் காரன்Õ என்னும் தொடரை எழுதினார். இடதுசாரி அமைப்பு களோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இல்லா விடினும் இடதுசாரி மனநிலையோடு அவரது ஆக்கங்கள் வெளிவந்தன.
விந்தனின் இத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, அவரைக் குறித்த ஆய்வேடு ஒன்றை உருவாக்கினேன். ம.பொ.சி. முதன்மைப்படுத்திய தமிழ்த் தேசீயம், பெரியார் செயல்பட்ட சுயமரியாதை இயக்கம், அதன் தொடர்ச்சியாக உருவான பல்வேறு திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் ஆகியவை குறித்த விரிவான வாசிப்பை இக்காலங்களில் நிகழ்த்துவதற்கு, எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் பின்புலத்தில்தான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யப்போனேன்.
முனைவர் பட்டத்தில் எவ்வகையான ஆய்வை மேற்கொண்டீர்கள்.
இடதுசாரிகருத்துநிலையின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த மனநிலை அப்போது. சோசலிச எதார்த்த வாதம் தமிழ்ச்சூழலில் செயல்பட்ட முறை குறித்து ஆய்வு செய்ய விரும்பினேன். சமூக முரண்பாடுகளுக்கும் ஆக்க இலக்கியத்திற்கும் உள்ள உறவுகளைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இடதுசாரி கருத்துநிலைகளைக் கொண்ட படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தேடிப் படித்து வந்தேன். எனது ஆசிரியர் தா.வே.வீராசாமி, தொ.மு.சி. ரகுநாதன் பற்றி ஆய்வு செய்யும் திட்டத்தை என்னிடம் கூறினார். அவரது முழு ஆக்கங்களையும் மதிப்பீடு செய்யும் நோக்கில் வாசித்தேன். ஆனால் எனது ஆசிரியர், தொ.மு.சி.யின் சிறுகதைகள் குறித்து மட்டும் எழுதச் சொன்னார். தொ.மு.சி. யின் Ôஇலக்கிய விமர்சனம்Õ தமிழில் எழுதப்பட்ட முதல் விமர்சன ஆக்கம். அதில் அவர் சோசலிச எதார்த்தவாதத்தை, விமரிசன சோசலிச எதார்த்தவாதமாக உரையாடலுக்கு உட்படுத்தியிருப்பார். உலகச் சூழலில் சோசலிச எதார்த்த வாதம் என்பது 1934இல் மார்க்சிம் கார்க்கியால் முன்னெடுக்கப்பட்டு உலகம் முழுவதுமுள்ள சோசலிச கருத்துநிலையில் சார்புடையவர்களை இணைத்து, மாநாடு ஒன்றை மாஸ்கோவில் நடத்தினார். மனிதனை முதன்மைப்படுத்தும் ஆக்கங்களை சோசலிச எதார்த்த வாத எழுத்தாகக் கட்டமைத்தனர். மதக்கருத்துநிலைகள் ஆதிக்கம் செலுத்திய உலகில், அதற்கு மாற்றாக - கடவுளுக்கு மாற்றாக மனிதனை முதன்மைப்படுத்தும் ஆக்க இலக்கியங்கள் சோசலிச எதார்த்தவாத இலக்கியங்கள் என்று கருதப்பட்டன. இதனை தொ.மு.சி. முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல், சோசலிச எதார்த்தத்தையும் விமரிசனக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தும், விமரிசன சோசலிச எதார்த்தவாதக் கோட்பாட்டை அடிப் படையாகக் கொண்டு, படைப்புலகில் செயல்பட்டார்.
இவ்வகையில் விந்தன், தொ.மு.சி.ரகுநாதன் ஆகியவர்களை வாசிப்பதில் தொடங்கி தமிழ்ச்சூழலின், குறிப்பாக 1915-1975 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு முற்பட்டேன். சுயமரியாதை இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகியவை செயல்படுவதில் காங்கிரஸ் கட்சி போன்ற அதிகார அமைப்புகள் செயல்படுத்திய நடைமுறைத்தந்திரங்கள் குறித்தும் வாசித்து அறிந்தேன். உலகம் முழுவதும் செயல்பட்டு வந்த இடதுசாரி அமைப்புகள், தமிழக இடதுசாரி அமைப்புகள், பெரியார் உருவாக்கிய சுய மரியாதை இயக்கம் ஆகியவை குறித்து அறிந்துகொள்வதில் அக்கறையோடு எனது ஆய்வுகளைச் செய்துவந்தேன்.
மேற்குறித்த தன்மைகள், தமிழக அச்சு ஊடக வழி உருவான இதழ்கள் மற்றும் புனைவுகளில் இடம் பெற்றிருக்கும் போக்குகளை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் வாசித்தேன். இதழ்களைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் மிகுதியாக உருவானது. பழைய இதழ்களை முழுமையாகச் சேர்த்து வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டேன். அதன் மூலம் தமிழகத்தில் செயல்பட்ட வ.உ.சி. பெரியார், திரு.வி.க. ம.பொ.சி. சிங்காரவேலர், ஜீவானந்தம், விந்தன், தமிழொளி, ஜெயகாந்தன் ஆகியோர் குறித்து விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த மன நிலையில், புதுமைப்பித்தன், வ.ரா. கு.அழகிரிசாமி, கு.ப.ரா., க.நா.சு., சி.சு.செல்லப்பா ஆகியோர் செயல் பாடுகளையும் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கத்தை அச்சுவழி உருவான ஆக்கங்களை ஆதாரமாகக் கொண்டு எப்படிப் புரிந்து கொள்வது என்பதை அடிப்படையாகக் கொண்டேன். அதுவே எனது ஆய்வின் அடிப்படையாக அமைந்தது.
சோசலிச எதார்த்தவாதம் பேசியவர்களும் அதனை மறுத்தவர்களும் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் எப்படிப் பங்கு பெறுகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.
சரி ; இந்தப் போக்கை எப்படி மதிப்பீடு செய்து புரிந்துகொண்டீர்கள்.
தனிப்பட்ட மனிதர்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் கருத்துநிலைகளே தமிழ்ச் சூழலில் ஆதிக்கம் செலுத்துவதைக் காண்கிறோம். தனமனித வழிபாடு தமிழ்ச் சமூகத்தின் உளவியல் நோயாக இருக்கின்றது. இந்நிலைக்கு மாற்றாக, மனிதர்கள் செயல்பட்ட கருத்து நிலைகள், அதோடு தொடர்புடைய இயக்கங்கள், அந்த அடிப்படையில் உருவான ஆக்கங்கள் என்ற புரிதல் முக்கியமானது. எனது ஆய்வுகளை இந்தப் பின்புலத்தில் நிகழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டேன். எனக்குக் கிடைத்த நிறுவனவயப்பட்ட ஆய்வுப் பயிற்சி முறைகளில் இத்தன்மையை நடைமுறைப்படுத்தினேன். இதன் மூலம் தனிப்பட்ட மனிதர்களின் நேர்மை, உழைப்பு ஆகியவற்றை வேறாகவும் அவர்களது கருத்து நிலைகளை வேறாகவும் புரிந்துகொள்ளும் பயிற்சி எனக்கு ஏற்பட்டது. க.நா.சு., சி.சு.செல்லப்பா ஆகிய சில மனிதர்களின் நேர்மை, உழைப்பு ஆகியவை குறித்து அளவு கடந்த மரியாதை எனக்கு உண்டு. ஆனால் அவர்களது கருத்துநிலை தமிழ்ச்சமூக அசைவியக்கத்திற்கு எவ்வகையில் பயன்பட்டது என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இவ்வகையான புரிதலின்றி அவர்களது செயல் பாட்டையும் கருத்துநிலையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பிக் கொள்ளும் வாசகர்கள் தமிழ்ச் சமூகத்தில் மிகுதி.
இவ்வகையான புரிதல், உங்களது ஆசிரியப் பணியில் எத்தகைய செல்வாக்கு செலுத்தியது.
தமிழ் ஆசிரியர்களாக இருப்பவர்கள், சமகால நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது குறைவு. தமிழ் படித்தவர்களின் குறையும் நிறையுமாக அமைவது, பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கண சமய மரபுகளை மட்டுமே கவனத்தில் கொள்வதும் சமகாலத்தை மறுப்பதும், தப்பித்தவறி சமகாலம்பற்றிப் பேசினால் வெகு கொச்சையாகப் புரிந்துகொள்வது என்பது தமிழ்ச் சூழலில், தமிழாசிரியர்கள் பெரும்பகுதியினரிடம் காணப்படும் தன்மையாகும். இதனால், சமகாலம் குறித்த ஆக்கங்களை முதன்மைப் படுத்திப் பேசும் மனநிலை எனக்கு ஏற்பட்டது. சமகாலம் குறித்துப் பேசினால், தவிர்க்கமுடியாமல் கருத்துநிலைச்சார்பு சார்ந்த அடையாளம் உருவாவது தவிர்க்க முடியாது. அடையாளத்தோடு செயல்படும் ஆசிரியரை, ஆசிரியர் சமூகம் ஏற்றுக்கொள்வதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும். குறிப்பிட்ட ஆசிரியரின் அடையாளத்தின் மீதான விருப்பு - வெறுப்புகள் உருப்பெறும். இப்படித் தான், எனது ஆய்வுப் பார்வை என்பதை விட எனது அடையாளத்தை முதன்மைப்படுத்திப் புரிந்துகொள்ளப் பட்டேன். ஆனால், எனது மாணவர்களிடம் இவ் வகையான அடையாளம் புரிந்துகொள்ளப்பட்ட முறை வேறாக இருந்தது. மனிதாபிமானம் சார்ந்த செயல் பாடுகளே நம்மை அடையாளப்படுத்தும். மாணவர் களோடு செயல்படுவது என்பதில் பல்வேறுபட்ட முறை மைகளைத் தெரிந்தோ தெரியாமலோ கைக்கொண்டேன்
அப்படியானால் உங்களுடைய பாடத்திட்டத் திற்கும் உங்களுடைய செயல்பாடுகளுக்கும் முரண்பாடு உருவாகவில்லையா...
கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்குள் மட்டும் நான் செயல்படவில்லை. இதனை எப்படி விளக்குவது என்று எனக்குப் புரியவில்லை. என்னிடம் ஆய்வுசெய்து முப்பத்தைந்து பேருக்கு மேல் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, எனது ஆசிரியப்பணி வழி நிகழ்ந்தவைகளை மதிப்பீடு செய்வோம். இவர்கள் நல்ல ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். தாங்கள் செய்யும் பணியில் விருப்பத்துடன் இருக்கிறார்கள். தங்கள் பணியை ஏதோ நெருக்கடியில் செய்கிறார்கள் என்றில்லை; ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். தாங்கள் கற்றறிந்தவற்றில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏதோ பிழைப்புக்காக செய்தோம் என்றில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் ஆய்வு என்பது வெறும் பிழைப்பிற்காகவே உள்ளது. இது எவ்வகையில் சாத்தியமானது எனில், வகுப்பறையையும் புறஉலகையும் வேறுவேறாக இல்லாமல் செயல்பட்டோம். புற உலகச் செயல்பாடுகளுக்கான அங்கீரிக்கப்பட்ட தொழில் கேந்திரங்களாக, வகுப்பறைகளைக் கட்டமைத்தோம். இத்தன்மையிலிருந்து எனது ஆய்வுகள் உருவாயின.
அவ்வகையில் எவ்வகையான ஆய்வுகளை உங்கள் மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறமுடியுமா...
இதற்கு மிக விரிவாகப் பேச வேண்டும். சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். இந்த ஆய்வுகளைப்பற்றிச் சொல்லுவதற்கு முன், இவ்வகையான ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு எவ்வகையான அடிப்படைகளைக் கைக்கொள்கிறோம் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.
- ஆய்வு என்பது எதுவாக இருந்தாலும் அது சமகாலச் சூழலில் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும்.
- ஆய்விற்கான ஆவணங்கள் குறித்த தேடுதலில் ஈடுபாடு முதன்மையாக இருக்க வேண்டும்
- ஆய்வு மேற்கொள்வோர் அத்துறை தொடர்பான வாழ்நாள் சார்ந்த உரையாடலில், செயல்படுபவராக இருப்பதற்கான மனநிலை உருவாக வேண்டும்.
எனது ஆய்வுகள், எனது ஆய்வு மாணவர்களோடு மேற்குறித்த வகையில் தான் நிகழ்ந்துகொண்டு இருப்பதாகக் கருதுகிறேன். இதனைச் சில எடுத்துக் காட்டுகள் மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சமூக நடைமுறையில் புதிதுபுதிதான விஷயங்கள் அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருக்கும். அவ் வகையான தன்மைகளில் ஒன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான அச்சு ஊடகம். இவ்வூடகம் என்பது பல பரிமாணங்களில் செயல்படுகிறது. இதிலிருந்து உரைநடை வந்தது; இதிலிருந்து புனைகதை வந்தது; இதிலிருந்து இதழியல் வந்தது; இதிலிருந்து புத்தகங்கள் உருவாக்கப்பட்டன; அதன் மூலம் தான் வாசிப்பு என்பது உருவானது. வாசிப்புப் பழக்கத்திற்கு அதுவே மூலதனம். வாசிப்புப் பழக்கத்திற்கும் எழுத்துப் பயிற்சிக்கும் ஏற்ற வகையில் அது செயல்படுகிறது. இதிலிருந்து உருவான நிறுவனம்தான் நூலகம். நூலகத்திற்கும் வாசிப்பிற்குமான உறவு... அது சார்ந்து உருப்பெறும் புலமைத்தளம்... இப்படி அச்சு ஊடகத்தின் தொடர்ச்சி; மற்றும் அதன் பரிமாணம் வளர்ந்து கொண்டே போகும். எனது ஆய்வு, மாணவ நண்பர் களோடு மேற்குறித்த பரிமாணத்தில்தான் போய்க் கொண்டே இருக்கும்.
வாய்மொழி ஊடகம், காட்சி ஊடகம், கேட்பு ஊடகம், மின் ஊடகம் ஆகியவை குறித்து விரித்துக் கொண்டே போகலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி, கல்வி அறிவு என்பதும் ஊடக அறிவு என்பதும் ஒன்றுக்குள் ஒன்று இணைந்தது. சமூக நிகழ்வுகள் என்பது ஊடக நிகழ்வுகளாக அமைந்துள்ளன. சமூகத்தைப் படிப்பது ஊடகத்தைப் படிப்பதுதான்.
தொல்காப்பியத்தைப் படிப்பதும் தினத்தந்தியை வாசிப்பதும் சமநிலையில் அமைய வேண்டும். இரண்டிற்குமான சமூகக் காரணங்கள்பற்றிய புரிதல், தமிழ்ப்படிப்பின், தமிழ் ஆய்வின் அடிப்படையாக அமைய வேண்டும். இந்தப் பின்புலத்தில்தான் எங்கள் ஆய்வுகள் நிகழ்ந்துகொண்டுள்ளன. நானும் எனது ஆய்வு மாணவர்களும் தொல்காப்பியத்தை - சங்க இலக்கியத்தைப் படிக்கும் மனநிலையில் புதுமைப்பித்தனை வாசிக்கிறோம். அடிப்படையில் வேறுபாடில்லை. எங்களது ஆய்வு மனநிலையின் தன்மை இதுதான்.
ஊடக ஆய்வில் எவ்வகையான ஊடகம் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளீர்கள்.
சிறுபத்திரிகை ஊடகம்பற்றி என்று கூறலாம். நான் ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில் தமிழில், சிறு பத்திரிகைகள் குறித்த விரிவான விவரணங்களைத் தொகுத்தேன். அவற்றைத் தேடிச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டேன். பழைய புத்தகக் கடைகளில் நிறைய தேடி வாங்கினேன். அது ஒரு நோயாகக்கூடப் பற்றிக் கொண்டது. இந்த நோயில் 1981 முதல் எனது சக கூட்டாளி கோணங்கி. எனது சொந்த நூலகத்தில் 1970-2010 இடைப்பட்ட நாற்பதாண்டு காலத் தெரிவு செய்யப்பட்ட சிறுபத்திரிகைகள் சுமார் 400 உள்ளன. இவை கட்டப்பட்ட தொகுப்புகளாக சுமார் 850 தொகுப்புகள் உள்ளன. எனது மாணவர்களிடம் இவை தொடர்பான ஆய்வின் மூலம், சமூகத்தின் வேறுபட்ட அச்சு நிகழ்வின் அரசியல் புரிந்துணர்வை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது. அவைகளை வாசிக்கும் சிறு பத்திரிகை வாசிப்புவட்டம் முதுகலையில் ஒருதாள்; பல்வேறு திட்டக்கட்டுரைகள்; எனச் செயல்பட்டிருக் கிறோம்.
எனது சிறுபத்திரிகை அரசியல் என்னும் கங்கு வரிசைக் குறுநூலில் 1930-2000 ஆண்டுகளுக்கிடையில் செயல்பட்ட தமிழ்ச்சமூகத்திற்கும் இக்காலங்களில் வெளிவந்த சிறுபத்திரிகைக்குமான உறவை, வரலாற்றுப் பின்புலத்தோடு பதிவு செய்துள்ளேன். காலஒழுங்கில், சிறுபத்திரிகை உருவாக்கத்திற்கும் தமிழ்ச்சமூகத்தின் நிகழ்வுகளுக்குமான தொடர்பை மதிப்பீடு செய்துள்ளேன். தமிழகத்தில் செயல்பட்ட இடதுசாரி இயக்கம், சுயமரியாதை இயக்கம், தூசிப்படை அமைப்புகள், விளம்பரம் என்னும் சந்தைச் செயல் பாட்டிற்கும் சிறுபத்திரிகைக்குமான உறவு எனப் பல பரிமாணங்களைப் பதிவு செய்துள்ளேன். இவ்வகையில், சமூகச் செயல்பாடுகளில் மாற்றாகச் செயல்படுவது குறித்த பதிவே எங்களது ஆய்வாக அமைந்திருக்கிறது.
அண்மைக்காலங்களில் பதிப்பு மற்றும் பதிப்பின் அரசியல் என்று உங்கள் மாணவர்கள் அதிகம் பேசுகிறார்களே... அதைப்பற்றி...
நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல், பதிப்பு என்பதை, அச்சு உருவாக்கத்தின் மூலம் ஏற்பட்ட ஒரு சமூக விளைவு என்று நாங்கள் பார்க்கிறோம். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் பாடத்திலும் ஆய்விலும் சுவடிகள், கல்வெட்டுக்கள், வாய்மொழி மரபுகள் ஆகியவற்றுக்கு முதன்மை தரும் தொல்லியல் ஆய்வுகளைத் தமிழ்ப்படிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம். இத்துறை சார்ந்த பட்டயப்படிப்புகளை பேரா.ந.சஞ்சீவி உருவாக்கினார். அதனை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம்.
ஒரு சுவடியிலிருந்து நூல் ஒன்று உருவாகும்போது அது அக்கால சமூக நிகழ்வோடு இணைந்துதான் வெளிப் படுகிறது. பல தருணங்களில் பேசியுள்ள, எழுதியுள்ள செய்தி ஒன்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்தலாம். 1850களில் சங்க இலக்கியச் சுவடிகள் ஆறுமுகநாவலர் சேகரிப்பில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் அவர் திருமுருகாற்றுப்படையை (1851) மட்டுமே பதிப்பித்து உள்ளார். பிறவற்றைப் பதிப்பிக்கவில்லை. சைவ சமய நூல்களில் இருந்த அக்கறை, சங்க நூல்களில் அவருக்கு இருக்க வாய்ப்பில்லை என்பது சமூக எதார்த்தம். அவர் அன்று அவற்றைப் பதிப்பித்து இருப்பாரெனில், தமிழ்ச்சமூகத்தில் தமிழ்த்தாத்தா என்ற ஒருவர் உருவாகியிருக்கவே முடியாதல்லவா?
இவ்வகையில் சமயம், சாதி, இனக்குழுக்கள், தனிநபர் சார்புகள் எனப் பல நிலைகளில் பதிப்பு வரலாற்றை எங்களது மாணவர்கள் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார்கள். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய ஆக்கங்கள், அச்சாக்கம் பெற்றதன் மூலம் உருவான தமிழ்ச் சமூகத்தின் வரலாறு குறித்து, நாங்கள் நிறைய எழுதி வருகிறோம். பதிப்பு என்பது தமிழ்ச்சமூக வரலாற்றின் போக்குகளைக் கண்டறிய உதவும் ஆவணமாகப் பார்க்கிறோம். சுவடிகளிலிருந்து நூல்கள் உருவான வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான பகுதி. ஆனால் அத்தன்மை நமது ஆய்விலும் பாடத்திலும் இன்னும் இடம்பெறவில்லை. கடுமையாக உழைத்து சங்க நூல்களை வெளிக்கொண்டு வந்த உ.வே.சா.விற்கு மிகப்பெரும் ஒளிவட்டத்தைக் கட்டுகிறோம். அது நமது மரபு; தவறில்லை; ஆனால் அப்பதிப்பின் மூலம் தமிழ்ச்சமூக வரலாற்றுப் புரிதலில் ஏற்பட்ட புதிய விளைவுகள் குறித்து அறியவில்லை. அதனையே நாங்கள் பதிப்பு அரசியல் என்று குறிக்கிறோம்.
அச்சான தமிழ்ப்பிரதிகள் அனைத்துகுறித்தும் இவ்வகையான உரையாடலை நிகழ்த்த முடியும். விரிவான உரையாடலைப் Ôபாரதிப்புத்தக நிறுவனம்Õ, Ôபுதிய புத்தகம் பேசுதுÕ என்ற இதழின் சிறப்பு மலராக வெளியிட்டுள்ள இரு தொகுதிகளில் காணலாம். அவற்றில் பல கட்டுரைகள் எம்துறை ஆய்வு மாணவர்கள் எழுதியுள்ளனர். இதற்கு அம்மலரின் பொறுப்பாசிரியர் தோழர் நாகராசன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
பதிப்பு அரசியல் என்ற ஆய்வுப்புலத்தைப் போலவே தொகுப்பு அரசியல் என்று அடிக்கடி உச்சரிக்கிறீர்களே! அதற்கு என்ன பொருள்!
ஆம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சைவப்பின்புலத்தில் பதினெட்டு சித்தர்களின் பாடல் களை Ôபெரிய ஞானக்கோவைÕ என்று தொகுத்து வெளி யிட்டார்கள். இதற்கு முன் இப்படித் தொகுப்பு இல்லை. சித்தர்கள் என்ற தனிவகையும் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், 1959 இல் Ôசித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள்Õ என்ற பெயரில் அரு.ராமநாதன் வெளியிட்டார். 1976இல் Ôசித்தர் பாடல்கள்Õ என்னும் புதுப்பெயரைக் கொடுத்து த.கோவிந்தன் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தார். இவர் மூன்று புதிய சித்தர்களைக் கண்டுபிடித்தார். உலகாயதச் சித்தர், காரைச்சித்தர், தடங்கண் சித்தர் என்பவர்கள் அந்த மூவர். இவர்கள் முறையே கோவேந்தன், பாரதி தாசன், ம.இலெ.தங்கப்பா ஆகியோர். இவர்களுக்குப் புனைபெயர் கொடுத்து, தானே பாட்டுக்களை எழுதி, சித்தர் தொகுப்பில் இணைத்துவிட்டார். (விரிவுக்குப் பார்க்க; பக்தி - அநுபவம் - அரசியல். தொகுப்பு நூல். ப.182) இந்தச் சித்தர்களை 16-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாக சித்தர்பற்றி எழுதுபவர்கள் ஆய்வு செய்கிறார்கள். இதனைத் தொகுப்பு அரசியல் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது?
அச்சு ஊடகம் பெரும் வணிக ஊடகமாக வடிவம் பெற்றுள்ளது. இதற்கான கச்சாப்பொருளைத் தொகுப்பு வடிவில்தான் தர முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், தாயுமானவர் பாடல்கள் முழுத்திரட்டு, பட்டினத்தார் பாடல் திரட்டு, அருணகிரிநாதர் திரட்டு, குமரகுருபரர் திரட்டு எல்லாம் இப்படித்தான் உருவாகியது. சங்க இலக்கியம், அறநூல்கள், பக்திநூல்கள், அருட்பாதிரட்டு ஆகியவை மேற்கொண்ட விதிமுறைகளோ மரபுகளோ இத்திரட்டுகளில் இல்லை. சந்தையில் விற்கவேண்டும் என்பதே முதன்மையான நோக்கம்.
இவ்வகையான திரட்டுக்களை வ.உ.சி. ப.ஜீவானந்தம், சங்கரதாஸ் சுவாமிகள், புதுமைப்பித்தன் ஆகியோருக்கு நான் செய்துள்ளேன். இதில் இந்த ஆளுமைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கமே இத்தொகுப்புகளின் அரசியல். எனவே பதிப்பு - தொகுப்பு ஆகியவை அச்சு ஊடகத்தில் செயல் படும் முறைமைகளைத் தமிழ்ச்சமூக வரலாற்றோடு இணைப்பதே எங்கள் ஆய்வின் நோக்கம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து உங்கள் பேச்சுகளில் அடிக்கடி குறிப்பு வருகிறது. உங்கள் மாணவர்கள் சிலரும் அந்நூற்றாண்டு தொடர்பாக ஆய்வு செய்வதாக அறிகிறேன். அதுபற்றிக் கூறுங்கள்.
இருபதாம் நுற்றாண்டின் இடையில் பிறந்து, அந்த நூற்றாண்டின் இறுதி இருபத்தைந்து ஆண்டுகளின் நேரடி அநுபவத்தோடு வாழ்ந்து வருகிறோம். இருபதாம் நூற்றாண்டின் முன் பகுதிகளை ஊகித்து, வாசித்து அறிந்துகொள்கிறோம். நம்முன் ஆவணங்கள் உள்ளன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு அத்தன்மை இல்லை. ஆவணங்கள் கிடைப்பது அரிது. அச்சூழல் பற்றிய புரிதலும் இல்லை. மேலும் ஐரோப்பிய நாடுகளில் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கி, படிப்படியாக வளர்ந்து 19ஆம் நூற்றாண்டில் தான் மறுமலர்ச்சி நிலைபேறு கொண்டது. ஆனால் நமக்கு 19ஆம் நூற்றாண்டில் தான் மறுமலர்ச்சி உருவானது. நாம் இன்று பேசும் நவீன தன்மைகள் அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானவை. கல்விக்கூடங்கள், நிர்வாக நிறுவனங்கள், அச்சுக்கூடங்கள் அனைத்தும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருப்பெற்றவை. இராமலிங்கர், ஆறுமுக நாவலர், பேரா.சுந்தரம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், வேதநாயகம்பிள்ளை ஆகிய புதிய சிந்தனையாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் உருவாயினர். நவீன தமிழ்ச் சமூகவரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு நிகழ்வுகள் முக்கிய மானவை. இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து ஆய்வு செய்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் எம்துறை மாணவர்கள் இந்த நூற்றாண்டு தொடர்பான விரிவான ஆவணங்களை, தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. சி.இராமலிங்கர் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் தொடங்கிய உரை யாடல் இப்போது பரவலாகியுள்ளது. இதைப்போலப் பல்வேறு ஆளுமைகளை வெளிக்கொணரும் வாய்ப்பு எங்களுக்குண்டு.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடர்பாக புதிதாக ஏதேனும் கண்டறிந்துள்ளீர்களா...
புதிதாகக் கண்டறியவில்லை. இதுவரை அறியப் படாத ஒன்றைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்து கிறோம் என்று கூறலாம். 1878-1900 முடிய செயல்பட்ட ஓர் இயக்கம் தொடர்பான விவரணங்கள் கிடைத்துள்ளன. Ôஇந்து சுயாக்கியான சங்கம்Õ என்னும் பெயரில் தொடங்கி Ôசென்னை சுயாக்கியான சங்கம்Õ (விணீபீக்ஷீணீs ஷிமீநீuறீணீக்ஷீ ஷிஷீநீவீமீtஹ்) என்ற அமைப்புச் செயல்பட்டது. இது ஒரு நாத்திக இயக்கம். இந்தியாவில் உருவான முதல் நாத்திக இயக்கம். இவர்கள் நடத்திய இதழ்கள், அமைப்பு செயல்பாடுகள், செயல்பட்டவர்கள் தொடர்பான விவரணங்கள் கிடைத்துள்ளன. இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் விரிவான தரவுகளைச் சேகரிக்க முடிந்தது. விரைவில் விரிவான ஆய்வாக இவை வெளிவரும். இவ்வகைச் செயல்பாடும் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடர்பான ஈடுபாட்டிற்குக் காரணம்.
தமிழ்ச்சூழலில் செயல்படும் தமிழியல் தொடர்பான ஆய்வு நிறுவனங்கள் குறித்து உங்கள் எதிர்வினை.
இதற்கு மிகவும் விரிவாகப் பேசவேண்டும். ஒரு பானைச் சோற்றுப் பதமாக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் பற்றிப் பேசுவோம். பேரா.வ.அய். சுப்பிரமணியம், தென்னிந்தியச் சூழலில் பெரும் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கிய பேராசிரியர். அவரது திட்டத்தில், தமிழியல் தொடர்பாக சுமார் இருபத்தைந்து துறைகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார். தமிழ், தமிழர், தமிழ் நாடு, உலகத் தமிழர்கள் என்று பரந்துபட்ட ஒரு இனக் குழுவின் சுமார் 5000 ஆண்டுகாலத் தொடர்ச்சியை ஆவணப்படுத்தி, ஆய்வு செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார். அந்த நிறுவனத்தின் வெளியீடுகள், கருத்தரங்குகள், ஆய்வுகள் குறித்து எனது ஆய்வு மாணவி ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.) ஆய்வைச் செய்து உள்ளார். இவர் ஆவணப்படுத்தியுள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில், அந்நிறுவனம் மேலும் மேலும் வளர வில்லை. இதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். இவ்வகையான நிறுவனங்கள் வளர்ந்தால் தமிழியல் ஆய்வு வேறு பரிமாணத்தில் வளர்ச்சியடையும் என்பது எனது நம்பிக்கை.
தமிழியல் ஆய்வின் பரிமாணத்தில் ‘Diaspora’ எனப்படும் தமிழர் அலைவு உழல்வியல் குறித்துக் கூறமுடியுமா...
தமிழர்கள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்கிறார்கள். மலேயப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் துறையில், தமிழ் முதன்மையான மொழி. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று. ஈழத்தில் தமிழின் இடம் குறித்து நமக்குத் தெரியும். இப் பின்புலத்தில், ஆசியக் கண்ட அளவில் பெரும்பான்மை யான மக்களின் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உள்ளது. ஈழத்தமிழர் புலம்பெயர்வில் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர் பெரும் எண்ணிக்கையில் குடியேறியுள்ளனர். உலகத்தில் யூதர்கள் பரவியதைப் போல் தமிழர்கள் பரவியுள்ளார்கள். இப்பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் ஆய்வுதான் ஜிணீனீவீறீ ஞிவீணீsஜீஷீக்ஷீணீ. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆசியாவில் வாழும் தமிழர்களும் ஆஸ்திரேலிய - அமெரிக்கத் தமிழர்களும் இணைந்து செயல்படும் ஆய்வாக, வருங்காலத்தில் இத்தன்மை உருப்பெறவேண்டும். உலகத் தமிழ் மாநாடுகள் மூலமாக உருப்பெற்ற ஆய்வுகளின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பரிமாணமாக இதைப் பார்க்க வேண்டும்.
சமகாலப் படைப்பாளிகள், அவர்களது படைப்பு, கல்வித் திட்டத்தில் சமகாலத்தன்மை ஆகியவை குறித்துச் சொல்லுங்களேன்.
எங்கள் துறையில் சி.சு.செல்லப்பா, லா.ச.ரா., வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், வண்ணநிலவன், அம்பை உள்ளிட்ட அனைவரும் எங்கள் மாணவர்கள் மத்தியில் உரையாடியுள்ளனர். ஏறக்குறைய சமகாலத் தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும் எங்கள் மாணவர்கள் சந்தித்திருக்கின்றார்கள். எல்லோரும் எங்களது நிகழ்வு களில் பங்கேற்றுள்ளார்கள். தமிழகத்தின் சிரத்தையான ஆய்வாளர்கள் அனைவரும் எங்கள் துறைக்கு வருகை தந்துள்ளார்கள். படிக்கும் ஆக்கத்தின் படைப்பாளியைச் சந்தித்து உரையாடுவதன் மூலம், மாணவர்கள் பெறும் மன எழுச்சி முக்கியமானது. இதனை நடைமுறைப்படுத்தி யுள்ளோம். முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் ஆய்வு மாணவர்கள் கருத்தரங்கம் நடத்தி, வெளிக்கொண்டு வந்திருக்கும் எட்டுத் தொகுப்புகளில் மேற்குறித்த தன்மைகளின் விரிவான பதிவை எங்கள் மாணவர்கள் செய்துள்ளனர்.
உங்கள் பாடத்திட்டத்தில் என்னென்ன துறைகளை இணைத்துள்ளீர்கள்.
தமிழ் இலக்கணம், இலக்கியம் என்பது அடிப்படை. இருபது தாளில் 12 தாள்கள் இவை. எஞ்சியுள்ள எட்டு தாள்களில் ஊடகம், அரங்கம், தொல்பொருள், சுவடி, நாட்டார் வழக்காறுகள், எனப் பலதுறைகளையும் செயல்முறைப் பாடமாக வடிவமைத்துள்ளோம். அரங்கப் பயிற்சி எங்கள் மாணவர்களுக்குக் கிடைக்கிறது. நவீன அரங்கம் குறித்த புரிதல் எங்கள் மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மாணவர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ‘பல்கலை அரங்கம்’ என்ற நாடக அமைப்பை நடத்தினோம். ‘கண்களுக்கு அப்பால்’, ‘ஒரு பயணத்தின் கதை’, ‘ஏகலைவன்’, ‘தீனிப்போர்’ ஆகிய நாடகங்களை நடத்தினோம். பல்கலை அரங்கத்தில் செயல்பட்ட, மாணவர்களின் உடல்மொழி, சென்னையில் செயல்பட்ட அரங்க வியலாளர்களின் உடல்மொழியிலிருந்து வேறுபட்டது. இளைய. பத்மநாதனின் பயிற்சியால், வீர்யமான நாடக மொழியை இக்குழு உள்வாங்கியது. ‘ஒரு பயணத்தின் கதை’, ‘தீனிப்போர்’ ஆகிய நாடகங்கள், தமிழ் நாடக வரலாற்றில் மறுதலிக்க இயலாத படைப்புகள். ஆனால் அதைத் தொடரும் வாய்ப்பு பின்னர் இல்லாமல் போனது. அது தொடர்பாக ‘வல்லினம்’ இதழ்ப் பேட்டியில் விரிவாகப் பதிவு செய்துள்ளேன். மீண்டும் பேசப் பிடிக்கவில்லை.
சங்க இலக்கிய ஆய்வுகளில் உங்கள் பங்களிப்பு குறித்துச் சொல்லுங்களேன்.
செவ்விலக்கியங்கள் நமது மொழியின் அரிய சொத்து. அண்மைக் காலங்களில், செவ்விலக்கியங்கள் குறித்த விரிவான அறிமுகம் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் மூலம் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் துறை மாணவர்களும் இத்துறையில் ஆய்வு செய்து வருகின்றனர். சங்க இலக்கியப் பிரதிகளின் கால முறை அறிதல் குறித்து, பேரா.ச.வையாபுரிப்பிள்ளை, வ.அய்.சுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். முன்னவர் இலக்கண அமைப்புகள், சொல்லாட்சி மற்றும் பொருளாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார். மொழியியல் கோட்பாடுகள் சார்ந்து வ.அய்.சு. மிக விரிவாக ஆராய்ந்து சங்கஇலக்கியப் பிரதிகளின் கால முறையைப் பதிவுசெய்துள்ளார். இம்மரபின் தொடர்ச்சியாக, நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவைகளை அடிப்படை யாகக் கொண்டு, மானிடவியல் பின்புலத்தில் சங்கப் பிரதிகளின் காலமுறை குறித்து ஆய்வு ஒன்றை நான் செய்துள்ளேன். இவ்வாய்வு மேற்குறித்தவர்களின் முடிவு களோடு ஒத்துப் போகிறது. இக்கட்டுரை ஆங்கிலத்தில், செக்கஸ்லோவேகியாவில் உள்ள பிராக் பல்கலைக்கழக ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
சங்க இலக்கியத் தொகுப்பில் காணப்படும் பல்வேறு உள் முரண்பாடுகள்; சங்க இலக்கியப் பிரதிகளுக்குக் கிடைக்கும் அனைத்துச் சுவடிகளையும் அடிப்படையாகக்கொண்டு பதிப்பிக்கும் மூலபாடப் பதிப்புமுறை, அகப் பாடல்களை, அகஇலக்கண மரபில் வைத்து மதிப்பீடு செய்யாமல், மனித சமூகத்தின் அகமரபு என்ற பொதுப்புத்தியில் எப்படிப் புரிந்து கொள்வது; மானிடவியல் கண்ணோட்டத்தில் சங்க இலக்கியம், தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியம் ஆகிய பிற ஆய்வுகளை எங்கள் மாணவர்கள் செய்து வருகிறார்கள். எங்கள் துறையில் சங்க இலக்கிய உரைகளை ஆய்வு செய்த அ. சதீஷ் நூலை அடை யாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தொல்காப்பியம் போன்ற இலக்கணங்கள் கூறும் வரையறைகள், குறிப்பாக வாய்பாடுகள் சார்ந்த ஆய்வைத் தவிர்த்து, மேற்குறித்த பின்புலத்தில் சங்க இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். நவீன புரிதலுக்கு சங்க இலக்கியப்பிரதிகள் எவ்வகையில் தேவைப்படுகின்றன என்ற கண்ணோட்டத்தில் எங்கள் ஆய்வுகள் உள்ளன.
சங்க இலக்கியத்தில் பயிற்சி பெற்றுள்ள எமது ஆய்வாளர்களைக்கொண்டு, குறைந்தது ஐந்து ஆண்டுக் கால அவகாசத்தில், புதிய பதிப்பு ஒன்றை எங்களால் உருவாக்க முடியும். மூலபாடம், பாடவேறுபாடுகள், மொழிபெயர்ப்பு, சுருக்கஉரை, வரலாறு, தொல்லியல், மானிடவியல், இலக்கணம் மற்றும் மொழியியல் ஆகிய அனைத்தும் அடங்கிய சங்கஇலக்கியப் பதிப்பை எம்மால் செய்ய முடியும். என்.சி.பி.எச். நிறுவன உதவியால் எதிர் காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றமுடியும் என்று நம்புகிறேன். பேரா.ச.வையாபுரிப்பிள்ளை உருவாக்கிய அகராதி மரபு சார்ந்த சங்கப் பதிப்பை ஒத்தது எங்களது பணி. அவரது காலத்தின் தனித்த செயல்பாடு அது. எங்கள் காலத்தின் அனைத்து வளங்களையும் உள்வாங்கி எங்களால் செயல்பட முடியும். அப்பதிப்பு சங்க இலக்கியப் பிரதிகளுக்காக முழுமையாக அமையும் என்ற நம்பிக்கையுண்டு.
நீங்கள் தொடர்பு கொண்டுள்ள இதழ்கள் குறித்து...
இருபத்தைந்து நாடுகளில் வாழும் தமிழர்கள், சுவிட்சர்லாந்து ஓசோன் நகரில் 2001 இல் கூடினர். ஈழம், தமிழகம், ஐரோப்பிய நாடுகள் என அனைத்துப் பகுதியில் வாழும் தமிழர்கள் தங்களுள் நடத்தும் கலை நிகழ்வுகளைக் குறிப்பாக, அரங்க நிகழ்வுகளை ஆவணப் படுத்தும் இதழ் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டனர். சிறப்பாசிரியராக நான் செயல்பட்டு ‘கட்டியம்’ என்னும் Ôஉலகத் தமிழர் அரங்க ஆய்விதழைÕக் கொண்டு வந்தோம். ஏழு இதழ்கள், நான்கு ஆண்டுகளில் வெளிவந்தது. அதனைத் தொடர இயலவில்லை. அவ்விதழ் அமைப்பு, உள்ளடக்கம் ஆகியவை இன்றும் நினைவை விட்டு அகலாத பதிவாக உள்ளது. அவ்விதழ்களில் அரங்கவியலாளர்கள் பற்றிய நீண்ட பேட்டிகளை வெளியிட்டோம்.
இப்போது ‘மாற்றுவெளி’ என்ற ஆய்விதழை நடத்தி வருகிறோம். இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் சிரத்தையான ஆய்விதழ்கள் வரவேண்டும். அது தமிழ்ச் சூழலில் சிறப்பாக நடை பெறவில்லை. எங்களது ஆய்வு மாணவர்கள் உதவி யோடு இவ்விதழ் வெளிவருகிறது. கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி, தமிழ்நாவல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், மாற்றுப் பாலினம் ஆகிய பொருண்மைகளில் இதுவரை இதழ்களைக் கொண்டு வந்துள்ளோம். சிரத்தையான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட முயன்றுள்ளோம். இவ்விதம் ஆய்வு இதழ்களில் செயல்படும் அனுபவம் செழுமையானது. கடுமையான உழைப்பையும் நேரத்தையும் கோரி நிற்பது. அதில் திருப்தியாகச் செயல்படுகிறோம். இந்த மரபை எமது மாணவர்கள் மேலும் முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மாற்று மற்றும் பரிசல் வெளியீட்டு நிறுவனத்தோடு உங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது.
இதற்குப் பரிசல் சிவ. செந்தில்நாதன் தான் சரியான விடையளிக்க முடியும். என்னைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளராக இருந்து ‘கங்கு வரிசை’ என்னும் பெயரில் 10 குறுநூல்களைக் கொண்டு வந்தோம். தமிழ்ச் சமூகத்தின் நிகழ்வுகளை அரசியல் கண்ணோட்டத்தில்/ தத்துவக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள உதவும் சிறு முயற்சியாக அவை அமைந்துள்ளன. இதனைப் போலவே பொதுப் பதிப்பா சிரியராக இருந்து இருபது தொகுதிளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். அதில் ஏழு தொகுதிகள் வெளிவந்துள்ளன. கூத்து, சுவரோவியம், அரங்க ஒலி, பக்தி ஆகியவை குறித்தும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை குறித்தும் இத்தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளோம். வருங்காலத்தில் என்.சி.பி.எச். நிறுவனத்தோடு இணைந்து இவ்வகைப் பணிகளைச் செய்ய விரும்பு கிறோம். அதற்கு இந்த நிறுவனம் இட மளிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் குறித்து உங்கள் மனப்பதிவைப் பகிர்ந்து கொள்ள முடியுமா.
தமிழில் செயல்படும் புத்தக வெளியீட்டு நிறுவனங்களில் மிகப் பெரிய பொது நிறுவனம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம். வணிகமாகச் செயல்படும் புத்தக வெளியீட்டுச் சூழலில், வேறுபட்டுச் செயல்படுகிறது இந்நிறுவனம். தனியொருவரின் சொத்தாக இந்நிறுவனம் இல்லை. 1950களிலிருந்து தமிழுக்குப் பல்துறை சார்ந்த நூல்களைக் கொண்டுவந்தது இந்த நிறுவனமே. இந்த நிறுவன வெளியீடுகளை வாசித்தே என்னைப் போன்றவர்கள் வளர்ந் தோம். இந்த நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் கடமை என்னைப் போன்றவர்களுக்கு இருப் பதாகக் கருதுகிறேன். 7500 பக்கங்களில் தோழர் ஜீவாவின் ஆங்கங்களைத் தொகுத்து, பதிப்பித்து இந்த நிறுவனத்திற்குக் கொடுத்தேன். பதிப்பு உரிமையையும் நிறுவனமே வைத்துக்கொள்ள அனுமதித்தேன். இந்நிறுவனம், இப்பணி மூலம் என்னை அங்கீகரித்துள்ளது. இவ் வகையான வெளியீட்டுப் பணிகளைச் செய்யும் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவது அவசியமெனக் கருதுகிறேன்.
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழ் பற்றித் தங்களின் மதிப்பீடு.
இந்த இதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியாக வாசிக்கும் வாசகனில் நானும் ஒருவன். இந்த இதழ் தொடர்பாக மறைந்த தோழர் ஆர்.பி.எஸ். அவர்களிடம் நிறைய விவாதித்துள்ளேன். இதழ் வடிவமைப்பு, உள்ளடக்கம் குறித்து அவரிடம் பேசி யுள்ளேன். இப்போது பொறுப்பாசிரியராகச் செயல்படும் கவிஞர் சரவணன் அவர் களிடமும் தொடர்ந்து இவ்விதழ் குறித்துப் பல்வேறு ஆலோசனைகளைக் கூறி வந்துள்ளேன். ‘தமிழ் அச்சுப் பண்பாடு’ என்னும் ஆய்வுக் கட்டுரைத்தொடரை எழுத இந்த இதழின் ஆசிரியர் குழு எனக்கு வாய்ப்பு தந்தது. பத்து இதழில் எழுதினேன். அதனை விரித்து எழுதி நூலாக வெளியிடும் தருணத் திற்காகக் காத்திருக்கிறேன். இவ்வகையில் இவ்விதழ் தமிழ்ச் சூழலில் காத்திரமாகச் செயல்படும் இதழ்களில் ஒன்றாக வெளி வந்துகொண்டிருக்கிறது.
உங்கள் நூலகம் இதழை facebook முலமாக அறிமுக படுத்துகள்
ReplyDeleteகீற்று இணையம் facebook உள்ளது போல உங்கள் நூலகம் இதழ் facebook முலமாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்
http://www.facebook.com/keetru.nandhan?ref=ts&fref=ts
அருமையான நேர்காணல் பதிவு
ReplyDelete